ஈரான் தனது வசம் வைத்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் சூழல் நெருங்கிவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அணு ஆயுதத் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படக்கூடிய இந்த யுரேனிய இருப்பை “அணு தூசி” எனக் குறிப்பிட்டு, அதனைத் திரும்ப ஒப்படைக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதை ஒரு முக்கிய முன்னேற்றமாகச் சுட்டிக்காட்டினார்.

மேலும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் இறுதியானால் தடையற்ற எண்ணெய் விநியோகம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் சுமூகமான போக்குவரத்து உறுதி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 21 மணிநேர நீண்ட பேச்சுவார்த்தையில் சில முரண்பாடுகள் நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை 20 ஆண்டுகளுக்கு முடக்க அமெரிக்கா முன்மொழிந்த நிலையில், ஈரான் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அதற்கு உடன்படத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் தனது அணு எரிபொருள் செறிவூட்டல் உரிமையை விட்டுக்கொடுக்கத் தெஹ்ரான் தயக்கம் காட்டி வந்த சூழலில், தற்போது டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் நிறைவேறினால், அது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.