லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான அமீர் ஹம்சா மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லாகூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வெளியாகியுள்ள வீடியோவில், லாகூர் சாலையில் வாகன நெரிசலில் அமீர் ஹம்சாவின் கார் நின்றுகொண்டிருக்கிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், திடீரென காரை வழிமறித்து சரமாரியாகத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் காரின் ஓட்டுநர் கதவைத் திறந்து கொண்டு உயிர் பிழைக்க ஓடினார். அவரை நோக்கியும் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், பின்னர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

 

இந்தத் தாக்குதலில் அமீர் ஹம்சா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டில் அவர் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். ஏற்கனவே 2025 மே மாதம் அவர் மீது கொலை முயற்சி நடைபெற்றது. பயங்கரவாத அமைப்புகளுக்கு இடையிலான உள்மோதல் காரணமாக இந்தத் தாக்குதல்கள் நடைபெறலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

பயங்கரவாதி ஹபீஸ் சயீதுடன் இணைந்து லஷ்கர் அமைப்பை உருவாக்கிய அமீர் ஹம்சா, அந்த அமைப்பின் பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டும் பணிகளில் முக்கியப் பங்காற்றி வந்தவர். கடந்த சில ஆண்டுகளாக, பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் இந்தியாவின் ‘மோஸ்ட் வான்டட்’ பயங்கரவாதிகளை அடையாளம் தெரியாத நபர்கள் குறிவைத்து அழித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் லஷ்கர், ஜெயஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புகளின் முக்கியத் தலைவர்கள் பலர் இதே பாணியில் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர்.