அமெரிக்காவில் காணாமல் போன நென்சி குத்ரி வழக்கு குறித்து, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து நேரலை செய்து வரும் பிரபல யூடியூபரும், ‘ஜே.எல்.ஆர் இன்வெஸ்டிகேட்ஸ்’ என்ற பக்கத்தின் உரிமையாளருமான ஜொனாதன் லீ ரிச்சஸ், லாஸ் வேகஸ் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். நென்சி குத்ரியின் வீட்டின் முன்பிருந்து தினமும் 15 மணி நேரத்திற்கும் மேலாகப் புலனாய்வு என்ற பெயரில் இவர் செய்த நேரலைகள், அங்கிருந்தவர்களுக்குப் பெரும் தொந்தரவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 5 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ள ஜொனாதன், குற்றப் பின்னணி தொடர்பான நேரலைகளின் போது பார்வையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு செயல்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

முன்னதாக, கிரெடிட் கார்டு மோசடி வழக்கில் சிக்கி 10 ஆண்டுகள் கூட்டாட்சிச் சிறையில் தண்டனை அனுபவித்த ஜொனாதன் மீது, அவரது முன்னாள் காதலி ஜெய்மி டென்னில் பிலிப்ஸ் நீதிமன்றத்தில் கொடூரத் தாக்குதல் புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தின் போது ஜொனாதன் தன்னைத் கழுத்தை  நெரித்துக் கொலை செய்ய முயன்றதாகவும்,  இதில் தனது மூக்கு மற்றும் விலா எலும்புகள் உடைந்ததாகவும் அவர் அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளார். பல வருடங்களாக நீடித்த இந்த வன்முறை மற்றும் அச்சுறுத்தல் காரணமாக, பிலிப்ஸுக்கு உடனடிப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், ஜொனாதனுக்கு எதிராகப் பாதுகாப்பு உத்தரவையும்  பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.