சிங்கப்பூரில் நள்ளிரவு 1 மணியளவில், வாகனப் போக்குவரத்து இல்லாத வெறிச்சோடிய சாலையைக் கடப்பதற்காக, பாதசாரிகளுக்கான சிக்னல் பச்சையாக மாறும் வரை ஒரு நபர் பொறுமையுடன் காத்திருக்கும் வீடியோ ஒன்றை இந்தியப் பெண் கிருத்திகா ஜெயின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பொதுமக்களின் ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு நாட்டின் ஒழுக்கத்தை இத்தகைய சிறு பழக்கவழக்கங்களே தீர்மானிக்கின்றன” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, விதிமுறைகளை மதிப்பதே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு அடித்தளம் என்பதை உணர்த்துவதாகப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Kritika Jain (@theroamingtoes)

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், ‘இதுதான் ஒழுக்கத்தின் உச்சக்கட்டம்’ என்றும், ‘கடுமையான சட்டங்கள், அபராதங்கள் மற்றும் மக்களின் பொறுப்புணர்வே சிங்கப்பூரை இவ்வாறு மாற்றியுள்ளது’ என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், இந்தியப் போக்குவரத்து சூழலுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ள சிலர், ‘இந்தியாவில் நள்ளிரவு நேரத்தில் சாலை காலியாக இருந்தால், பெரும்பாலானோர் இடமும் வலமும் பார்த்துவிட்டு சிக்னலை மதிக்காமல் சாலையைக் கடந்துவிடுவர்’ எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் உள்கட்டமைப்பு வளர்ச்சி மட்டுமின்றி, பொது இடங்களில் குடிமக்கள் நடந்துகொள்ளும் முறையில்தான் ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி அடங்கியுள்ளது என்பதை இந்த வீடியோ ஒரு சிறிய பாடமாக உணர்த்தியுள்ளதாகப் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.