சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் தனது கைவண்டியில் பாரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு ஏற்றமான சாலையில் இழுத்துச் செல்ல முடியாமல் திணறுகிறார். யாராவது உதவிக்கு வருவார்களா என்று அவர் ஏங்கியபடி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணம் பார்ப்பவர் எவரையும் கலங்க வைக்கும். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டுத் தயக்கமே இல்லாமல் ஓடிச் சென்று, அந்த பாரமான கைவண்டியைப் பின்னால் இருந்து தள்ளி, மேடான பகுதியைத் தாண்டிச் செல்ல அந்த முதியவருக்கு உதவியுள்ளார்.

​எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், சாலையில் போகிற ஒரு மனிதருக்குத் தானாக முன்வந்து உதவிய அந்த இளைஞரின் செயல் தற்போது இணையத்தில் ‘தெறி’ வைரலாகி வருகிறது. “உதவி செய்யப் பணம் தேவையில்லை, நல்ல மனசு இருந்தா போதும்” என்று நெட்டிசன்கள் அந்த இளைஞரை மனதாரப் பாராட்டி வருகின்றனர். வேதனையான செய்திகளுக்கு நடுவே, இப்படிப்பட்ட மனிதாபிமானச் செயல்கள் தான் உலகத்தின் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகிறது. அந்த இளைஞரின் செயலால் அந்த முதியவரின் முகத்தில் தெரிந்த நிம்மதியும், புன்னகையும் எத்தனையோ கோடிப் பணத்திற்கு ஈடாகாது.