கேரளாவில் பீர் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த அரசு மதுபானக் கழகத்திற்கு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்குள்ள அரசு மதுபானக் கடையில் 170 ரூபாய் MRP விலை கொண்ட பீர் பாட்டிலை 180 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பியபோது, கடை ஊழியர்கள் அவரிடம் முரட்டுத்தனமாகவும் அலட்சியமாகவும் நடந்து கொண்டுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர், தனக்கு நீதி வேண்டி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, அரசு கொண்டு வந்த சமூக பாதுகாப்பு வரி விதிப்பு காரணமாகவே இந்த 10 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்பட்டதாக KSBC தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், நுகர்வோர் சட்ட விதிகளின்படி அச்சிடப்பட்ட சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாகப் பொருட்களை விற்பனை செய்வது குற்றம் என்று நீதிமன்றம் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியது.

மேலும், நுகர்வோரின் உரிமைகளை நிலைநாட்ட உத்தரவிட்ட நீதிமன்றம், கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயை 9% வட்டியுடன் திருப்பித் தரவும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 15,000 ரூபாய் இழப்பீடாகவும், வழக்குச் செலவுக்காக 10,000 ரூபாய் என மொத்தம் 25,000 ரூபாயை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் கேரள மாநில பானங்கள் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.