ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ‘செட்டபெல்லோ’ என்ற எண்ணெய் டாங்கர் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துவிட்டதாக மத்திய கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரான் மீதான கடல்வழி முற்றுகையை மீறி இந்தக் கப்பல் வந்ததாகக் கூறி அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இக்கப்பலில் இருந்த 21 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த 3 மாலுமிகளில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரின் உடல்கள் ஓமன் கடற்படையினரின் தீவிரத் தேடுதல் வேட்டையில் மீட்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு மாலுமியின் உடலைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடர்ந்து, புதுடெல்லியில் உள்ள தற்காலிக அமெரிக்க தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்குள் ஓமன் கடற்பரப்பில் நடக்கும் மூன்றாவது தாக்குதல் இது என்பதால் சர்வதேச கடல் எல்லையில் பதற்றம் உச்சமடைந்துள்ளது.

இதற்கிடையே, ஓமன் நாட்டுத் துறைமுகத்திற்கு அருகே மற்றொரு வணிகக் கப்பலும் இன்று மதியம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் அரபுக்கடல் மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதுடன், மத்திய அரசு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.