இந்தியாவில் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் முன்னணி ரியல் எஸ்டேட் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் இந்தியாவில் உள்ள சுமார் 250 ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிரடி முடிவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காஸ் நெஜாஷியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஊழியர்களுக்கு அனுப்பிய மற்றும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள செய்தியில், “தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எங்களது வாடிக்கையாளர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருப்பதால், அவர்களுக்குச் சேவை செய்யும் பணிகளை அமெரிக்காவிற்கு உள்ளேயே மாற்றி வருகிறோம். இந்த புதிய முடிவின் மூலம் இந்தியாவில் உள்ள ஓப்பண்டோர் நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்த முடிவிற்கான முக்கிய காரணம் குறித்துப் பேசிய அவர், “பல்வேறு பணிகளை கையாள்வதற்காக இந்தியாவில் ஒரு பெரிய குழுவை உருவாக்கியிருந்தோம்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அமெரிக்காவில் AI தொழில்நுட்பக் குழுக்களின் பயன்பாடு காரணமாக, இந்த வேலைகளை வெளிநாட்டில் இருந்து செய்ய வேண்டிய தேவை இப்போது குறைந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்அதே சமயம், இந்திய ஊழியர்களின் திறமை குறைவால் இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்திய CEO, இந்திய ஊழியர்கள் அனைவரும் மிகுந்த திறமைசாலிகள் என்றும், அவர்களது பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றும் கூறியுள்ளார்.

வேலை இழக்கும் ஊழியர்களுக்குச் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை, புதிய வேலை தேடுவதற்கான உதவிகள் மற்றும் பிற ஆதரவுகள் வழங்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஐடி துறையில் ‘AI’ தொழில்நுட்பத்தின் வருகையால் இந்திய ஊழியர்களின் வேலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம், தற்போழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.