மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோரத் தீ விபத்தில், பிரபல தொழிலதிபர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். எலக்ட்ரிக் கார் சார்ஜ் செய்யப்பட்டபோது ஏற்பட்ட மின்கசிவே இந்தத் துயரத்திற்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தூர் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் பகுதியில் உள்ள ‘அர்ஹம் வில்லா’ என்ற இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தொழிலதிபர் மனோஜ் புக்லியா (58). புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், தரைத்தளத்தில் நின்றிருந்த எலக்ட்ரிக் காருக்கு மின்சாரம் மூலம் சார்ஜ் ஏற்றப்பட்டுள்ளது. அப்போது அதிக வெப்பம் காரணமாக ஒயரில் ஏற்பட்ட மின்கசிவு திடீரெனத் தீப்பற்றிக் கொண்டது.
கண் இமைக்கும் நேரத்தில் தீ வீடு முழுவதும் பரவியது. தூக்கத்தில் இருந்த குடும்பத்தினர் தப்பிக்க வழி தெரியாமல் அலறினர். அப்போது வீட்டில் இருந்த இரண்டு சமையல் எரிவாயு உருளைகள் (LPG Cylinders) பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், தீயின் வீரியம் கட்டுக்கடங்காமல் போனது.
இந்தக் கோர விபத்தில் மனோஜ் புக்லியா, அவரது மருமகள் சிம்ரன் (30), மற்றும் பீகாரிலிருந்து உறவினர் திருமணத்திற்காக வந்திருந்த விஜய் செத்தியா (65), அவரது மனைவி சுமன் (60), மகள் ருச்சிகா (35) மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 8 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் தான் மனோஜ் புக்லியாவின் மகனுக்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணக் கோலம் கலைவதற்குள் அந்தக் குடும்பத்தில் 8 பேர் பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ மளமளவெனப் பரவியபோது, பால்கனி கதவைத் திறந்து கொண்டு மனோஜின் மனைவி சுனிதா மற்றும் அவரது மூன்று மகன்கள் உதவி கேட்டு அலறினர். உடனே விரைந்து வந்த அண்டை வீட்டுக்காரர் மகேந்திர ஜெயின் மற்றும் சிலர், ஏணி மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி பால்கனியில் இருந்த இரும்பு கிரில்களை உடைத்து அவர்களை பத்திரமாக மீட்டனர். எனினும், புகை மூட்டம் காரணமாக மாடியில் இருந்த மற்றவர்களை மீட்க முடியாமல் போனது.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “எலக்ட்ரிக் கார் சார்ஜிங் பாயிண்ட் மூலம் ஏற்பட்டுள்ள இந்த விபத்து ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்ததுடன், இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்து மொத்தம் 10 எரிவாயு உருளைகளைப் போலீஸார் மீட்டுள்ளனர். ஒரு வீட்டில் எதற்காக இத்தனை உருளைகள் வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயை அணைக்க சுமார் 1.7 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
