மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிருடன் இருந்த இளைஞர் ஒருவரை மருத்துவர்கள் தவறாக இறந்துவிட்டதாக அறிவித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் இத்தகைய அலட்சியப்போக்கு பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குணா மாவட்டம் ஹுஜ்மீல் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஜான் பார்ட்டி. இவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த மார்ச் 11-ஆம் தேதி அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் குணா மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முறையான தீவிரப் பரிசோதனைகளை மேற்கொள்ளாமலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த இளைஞரின் உடலில் அசைவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவருக்கு முழுமையாக நினைவு திரும்பியது. தான் பிணவறையில் இருப்பதை உணர்ந்த ஜான் பார்ட்டி, கடும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து நிர்வாண கோலத்தில் வெளியே தப்பி ஓடினார். மரணமடைந்ததாகக் கூறப்பட்ட இளைஞர் உயிருடன் ஓடி வருவதைக் கண்ட நோயாளி உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பீதியடைந்து அங்குமிங்கும் சிதறி ஓடினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் மீட்கப்பட்ட ஜான் பார்ட்டி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மருத்துவர்கள் என்னைச் சரியாகப் பரிசோதிக்காமல் பிணவறைக்கு அனுப்பிவிட்டனர். எனக்குச் சரியான நேரத்தில் நினைவு திரும்பாமல் இருந்திருந்தால், நான் உயிருடன் இருக்கும்போதே அவர்கள் என் உடலைக் கீறி பிரேத பரிசோதனை செய்திருப்பார்கள். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இதுவரை முறையான விளக்கம் அளிக்கவில்லை. மருத்துவர்களின் இந்த அலட்சியமான செயல்பாட்டிற்குப் பின்னால் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, மாநில சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.