சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. வாரணாசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் யஷ் மானே, தெருக்களில் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்களை ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து அளித்துள்ளார்.

யஷ் மானே அந்தச் சிறுவர்களை வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற ‘தாஜ் கங்கா’ (Taj Ganges) ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். சிறுவர்களின் தோற்றத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், யஷ் மானே ஊழியர்களுடன் சுமார் 30 நிமிடங்கள் வாதாடி சண்டையிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by yash mane (helicopterdada) – social worker (@yashmaneofficial)

இறுதியில் அவரது விடாமுயற்சியால் சிறுவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தங்களது கனவிலும் நினைத்துப் பார்த்திராத அந்த ஆடம்பரமான சூழலில் அமர்ந்து, உயர்தர உணவுகளை அந்தச் சிறுவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ரசித்து உண்டனர். இந்த நெகிழ்ச்சி தருணத்தை இணையத்தில் பகிர்ந்துள்ள யஷ் மானே “முதல்முறையாக இந்தச் சிறுவர்கள் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் அமர்ந்து முழுமையான உணவை உட்கொண்டனர். சில நேரங்களில் நாம் செய்யும் ஒரு சிறிய போராட்டம், ஒருவருடைய மிகப்பெரிய கனவை நனவாக்கக்கூடும்,” எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பாராட்டி வருகின்றனர்.

இதேபோல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மற்றொரு வீடியோவில், சாலையோரம் வசிக்கும் ஒரு சிறுமியின் பெருந்தன்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ‘இன்ஃப்ளூயன்சர்’ (Influencer) ஒருவரிடம், அந்தச் சிறுமி பெல் பூரி சாப்பிடுமாறு வற்புறுத்துகிறார். தன்னிடம் பணம் இல்லை என அந்தப் பெண் விளையாட்டாகக் கூறவே, அந்தச் சிறுமி சற்றும் யோசிக்காமல் தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து அந்தப் பெண்ணிற்கு பெல் பூரி வாங்கிக் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த வீடியோ இதுவரை 2.4 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. ஏழ்மையிலும் பிறருக்கு உதவும் அந்தச் சிறுமியின் குணம் இணையவாசிகளை நெகிழச் செய்துள்ளது.