மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எம்.டி.எஸ் பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வு தேதியை சமீபத்தில் அறிவித்துள்ளது. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இதுபோன்ற பணியாளர்களுக்கான தேர்வு குறித்த விழிப்புணர்வை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஏ.ஐ.எம் டி.என் youtube சேனலை தொடங்கியுள்ளது. இந்த youtube சேனலில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எம்.டி.எஸ் தேர்வுக்கான காணொளி வகுப்புகளை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி நடத்துகிறது.

இந்நிலையில் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தலைப்புகளிலும் வல்லுனர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு அந்த காணொளி காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. தினமும் மூன்று காணொளி காட்சிகள் வீதம் 60 நாட்களில் அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதேபோல் 30 மாதிரி தேர்வுகளும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள “உனக்குள் தேடு” என்னும் செயலியின் மூலமாக உடனுக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்படுகிறது. இன்று முதல் இந்த பயிற்சி தொடங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.