ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்கீடுடன் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி திட்டமும் முக்கியமானதாகும்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் போன்றவை குறித்து ஆதிதிராவிடர் மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்திலும், பழங்குடியின மாணவர்கள் https://tribal.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இதற்கிடையே போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு சார்பில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது https://tnadtwscholarship.tn.gov.in என்ற அந்த இணையதளம் மூலமாக மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆதார் எண், இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று, ஜாதி சான்று போன்ற பிற ஆவணங்களுடன் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.