தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற தவெக முயன்றபோது, தங்களது கட்சி எம்.எல்.ஏ. காமராஜிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

மேலும், இந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்திற்கு எதிராகவும், சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாகவும் இரு பிரிவாக வாக்களித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில் அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, பணம் வாங்கிக்கொண்டு குதிரை பேரம் நடந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இந்தச் சூழலில், சட்டமன்ற உறுப்பினர்கள் பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்ட விவகாரம் தொடர்பாகப் புகழ்பெற்ற ‘இராஜாராம் பால்’ வழக்கு தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காகப் பணம் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் இராஜாராம் பால் உட்பட 11 எம்.பி.க்கள், நாடாளுமன்ற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “மக்கள் பிரதிநிதிகள் பணம் பெற்றுக்கொண்டு செயல்படுவது தண்டனைக்குரியது; தவறான நடத்தைக்காக உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் உண்டு” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது தமிழகச் சட்டமன்றத்திலும் குதிரை பேரப் புகார் எழுந்துள்ளதால், இந்த வழக்கின்படி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.