தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் அளித்த பேட்டி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டு, கடும் எதிர்ப்பு காரணமாக ஒரே நாளில் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்ட நிலையில், இவரது இந்த சமீபத்திய பேட்டி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பாக, 2029-ல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது கடினம் என்றும், அந்த சமயத்தில் விஜய் தனது ஜாதக யோகத்தின் உச்சத்தில் இருப்பார் என்பதால் அவர் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு மெகா குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அதேபோல், திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார் குறித்த இவரது கணிப்பு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அஜித்தின் ஜாதகப்படி அவருக்கு தமிழகத்தின் முதலமைச்சராகும் யோகம் மிக வலுவாக இருப்பதாகவும், இது தொடர்பாக தாம் நேரில் தொடர்புகொண்டு பேசியதாகவும் ரத்தன் பண்டிட் குறிப்பிட்டுள்ளார். ஆனால், “எனக்கு அரசியலில் விருப்பமில்லை” என்று அஜித் அந்த வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதில் அஜித் தயக்கம் காட்டினாலும், அவரது நேரம் அவரை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்று ஜோதிடர் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
