பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது 88-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பேசிய அவர், “நான் அரசியல் துறவறம் மேற்கொள்ள இருக்கிறேன். இன்று முதல் அரசியல் பேச மாட்டேன்; பாமக விவகாரங்களில் தலையிட மாட்டேன். கட்சிப் பணிகளை அன்புமணி பார்த்துக்கொள்வார். என்னைச் சந்திக்க விரும்புபவர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வரலாம்” எனக் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக கட்சி, ராமதாஸ் மற்றும் அன்புமணி தலைமையில் இரு பிரிவுகளாகப் போட்டியிட்ட சூழலில், அன்புமணி தரப்பிற்கே ‘மாம்பழம்’ சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட காலமாகப் பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் நிலவி வந்தன.

நீண்ட நாட்களாகத் தொடர்ந்த இந்தத் தந்தை-மகன் மோதலுக்கு இடையே, சமீபத்தில்தான் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், ராமதாஸ் அவர்கள் முழுமையாக அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது பாமக தொண்டர்கள் மத்தியிலும், தமிழக அரசியலிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.