ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் சிஆர்பிஎப் பிரிவில் பணியாற்றி வரும் வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்ந்த வீராங்கனை கயல்விழி, தனது வீட்டில் நடந்த நகை திருட்டு சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ராணுவ சீருடையில் அழும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “ஜூன் 24-ஆம் தேதி மதியம் 3.30 மணியளவில் என் அம்மா மாடு மேய்க்க வெளியேறியிருந்தார். அப்போது யாரோ வீட்டின் பூட்டை உடைத்து, என் கல்யாணத்துக்காக சேர்த்து வைத்த 22 சவரன் நகை, ரூ.50,000 பணம், பட்டு புடவைகள் என அனைத்தையும் திருடி சென்றுள்ளனர்” என கூறி உள்ளார்.
வீட்டுக்குத் திரும்பிய பெற்றோர் நகை திருடு போனதை அறிந்து கதறி அழுததாகவும், உடனடியாக அவரது அண்ணன் காவல்துறையில் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகார் 24-ஆம் தேதி இரவு அளிக்கப்பட்டிருந்தும், போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
அடுத்த நாள் பந்தோபஸ்து பணிக்கு போலீசார் செல்லவேண்டும் என கூறி வந்து பார்க்கவில்லை என்றும், கைரேகை நிபுணர்கள் மட்டுமே 25-ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு வந்ததாகக் கூறினார். அதுமட்டுமின்றி, ஜூன் 28-ஆம் தேதி வரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும், போலீசார் தனது எண்ணற்ற முயற்சிகளுக்கும் கேஸ் எடுக்க மறுத்துவிட்டதாக வேதனையுடன் கூறுகிறார். “எங்கள் வீட்டில் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறோம்” என அவர் வீடியோவில் கதறி அழுதுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதையடுத்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய எல்லையில் வீரமுடன் பணியாற்றும் ஒரு தமிழ் பெண், தனது சொந்த வீட்டில் நடந்த திருட்டுக்கே நீதிக்காக ஆன்லைனில் கெஞ்ச வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார். இது வெறும் சட்டப் பலவீனம் அல்ல.
திமுக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக திரிந்து, தேசத்தின் பாதுகாவலர்கள் நீதிக்காக மன்றாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஒரு சவால்” என தெரிவித்துள்ளார். தற்போது சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி சமூக வலைதளங்களில் குரல் எழுந்துவருகிறது.
