மும்பை நகரம் செம்பூர் பகுதியில், ₹1,000 பணம் கொடுக்க மறுத்ததால், ஒரு 44 வயது பேட்மிண்டன் பயிற்சியாளரை மூன்று பேர் கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஞாயிறு இரவு, பிரபுத்தா நகரத்தில் உள்ள அம்பேத்கர் எஸ்.ஆர்.ஏ. குடியிருப்புப் பகுதியில் நடந்தது.

பிரபுல்லா கத்விசாவே என்ற பயிற்சியாளர் தனது நண்பருடன் வீட்டின் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தபோது, சன்னி போசலே, சன்னி புச்சுடே, விகாஸ் கெத்ரே என்ற மூவர் வந்து, “நாங்கள் சன்னி கும்பல்” என்று சொல்லி, வாரத்திற்கு ₹1,000 கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

பணம் கொடுக்க மறுத்ததால், அவர்கள் முதலில் கத்விசாவேவின் தங்க வளையலை பறித்தனர். பின்னர், உடைந்த பீர் பாட்டிலால் அவரை வயிற்றில் பலமுறை குத்தினர். இதில் அவர் பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள சியோன் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோதும் தற்போது நிலைமை சற்று மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூவரையும்  கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இவ்வாறு ₹1,000 போன்ற சிறிய தொகைக்காக ஏற்படும் வன்முறைகள், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.