ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, கடந்த 2024-ம் ஆண்டு ஆர்க்டிக் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் நடைப்பயிற்சியின் போது உடல்நலக்குறைவால் இயற்கையாக இறந்ததாக ரஷ்ய அரசு கூறி வந்த நிலையில், நவல்னியின் குடும்பத்தினரும் உலக நாடுகளும் புதின் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

தனது கணவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக அவரது மனைவி யுலியா நவல்னாயா தொடர்ந்து கூறி வந்த நிலையில், தற்போது அதற்கு வலுசேர்க்கும் விதமாக ஐந்து ஐரோப்பிய நாடுகள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளன.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நவல்னியின் உடலில் ‘எபிபாடிடின்’ என்ற கொடிய நஞ்சு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தென் அமெரிக்காவில் உள்ள ஒரு வகை விஷத் தவளைகளிடம் இருந்து எடுக்கப்படும் நஞ்சாகும்.

இந்த வகை தவளைகள் ரஷ்யாவில் கிடையாது என்பதால், திட்டமிட்டே வெளிநாட்டில் இருந்து இந்த விஷத்தை வரவழைத்து ரஷ்ய அரசு அவரைப் படுகொலை செய்திருப்பதாக அந்த நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்த ஆதாரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நவல்னியின் மனைவி, தனது கணவர் கொல்லப்பட்டதாக தான் கூறியது இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் இவெட் கூப்பர், அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்க ரஷ்ய அரசு எவ்வளவு கீழ்த்தரமான முறைகளைக் கையாள்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்று விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.