இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஒலிம்பிக் கிராமங்களில் உணவு மற்றும் அடிப்படை வசதிகளில் தட்டுப்பாடு நிலவுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த விசித்திரமான தட்டுப்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. போட்டிகள் தொடங்கிய மூன்றே நாட்களில், அங்கு தங்கியிருந்த 3000 வீரர்களுக்காக வழங்கப்பட்டிருந்த 10000 ஆணுறைகளும் முழுமையாகத் தீர்ந்துவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
கடந்த 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் சுமார் மூன்று லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட்ட நிலையில், மிலானில் வெறும் பத்தாயிரம் மட்டுமே வழங்கப்பட்டதுதான் இந்தத் திடீர் தட்டுப்பாட்டிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பான உறவு மற்றும் எச்.ஐ.வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1988-ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மிலானில் ஏற்பட்டுள்ள இந்தத் தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ், ஒலிம்பிக் சாசனத்தின் விதி அறுபத்தி இரண்டின்படி வீரர்களுக்குக் கண்டிப்பாக ஆணுறைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போது காதலர் வாரக் கொண்டாட்டங்கள் மற்றும் வீரர்களின் தேவை அதிகரித்துள்ளதால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் கூடுதல் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுத் தொடர் இருப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
