மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகரில், 11 வயது சிறுமி ஒருவரை அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2024 நவம்பர் முதல் இந்தத் துயரம் நடந்து வந்த நிலையில், அச்சிறுமி மிகுந்த துணிச்சலுடன் கடந்த வெள்ளிக்கிழமை ஷதோரா காவல் நிலையத்திற்குச் சென்று அதிகாரிகளிடம் தனது புகாரை அளித்துள்ளார்.
தனது தாயே இந்தச் சம்பவத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று தடுத்தபோதிலும், அந்தச் சிறுமி காவல் நிலையப் பொறுப்பதிகாரியைச் சந்தித்துத் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளார்.
பெண் துணை ஆய்வாளர் முன்னிலையில் சிறுமி அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அந்த வளர்ப்புத் தந்தையைக் கைது செய்தனர். விசாரணையில், சிறுமியின் தாய் தனது கணவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதும், புகாரைத் திரும்பப் பெறும்படி சிறுமியை வற்புறுத்தியதும் தெரியவந்தது.
போதிய ஆதாரங்களின் அடிப்படையில், வளர்ப்புத் தந்தை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் கடுமையான சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தற்போது அந்தச் சிறுமி பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு, அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளும் மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
