ஆயுள் முழுக்கப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய திருமண நினைவுகளைப் புகைப்படக் கலைஞர் ஒருவரின் அசாத்திய அலட்சியத்தால் இழந்து தவித்த புதுப்பெண் ஒருவருக்கு, நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாகத் தலையிட்டு உரிய நீதியைப் பெற்றுத் தந்துள்ளது. இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை மட்டும் குருட்டுத்தனமாக நம்பி முன்பணம் செலுத்தும் தற்போதைய தலைமுறையினருக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் விதமாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டிருந்த புகைப்படத் தொகுப்புகளைப் பார்த்து வியந்து, தனது திருமண நிகழ்வை முழுமையாகப் படம்பிடிக்க ஒரு ஸ்டுடியோவை ஒப்பந்தம் செய்துள்ளார். உயர்தர வீடியோ, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் 70 எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பிற்கு ரூ.56,000 பேசப்பட்டு, அதில் முன்பணமாக ரூ.45,000-ஐ அவர் செலுத்தியுள்ளார்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு அந்தப் புகைப்படக் கலைஞர் வெறும் 7 படங்களை மட்டுமே கொடுத்து விட்டுத் தொடர்ந்து போனை எடுக்காமல் இழுத்தடித்துள்ளார். அதையும் தாண்டி அவர் கொடுத்த 32 ஜிபி பென் டிரைவை கணினியில் போட்டுப் பார்த்தபோது அது முற்றிலும் காலியாக இருந்துள்ளது. இது குறித்து மணமகள் வாக்குவாதம் செய்யவே, மாற்றாகக் கொடுக்கப்பட்ட மற்றொரு பென் டிரைவில் வேறொரு புதிய ஜோடியின் திருமணப் புகைப்படங்கள் இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாகத் தன்னிடம் திருமண வீடியோக்கள் எதுவும் இல்லை என்பதை அந்தப் புகைப்படக் கலைஞர் ஒப்புக்கொண்டார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணமகள், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடினார். வழக்கை முழுமையாக விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத் தலைவி மற்றும் உறுப்பினர் ஆகியோர் அடங்கிய அமர்வு, புகைப்படக் கலைஞரின் இந்தச் செயல் கடுமையான சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை என்று சாடியது.
மேலும், மணமகளிடம் வாங்கிய முன்பணம் ரூ.45,000-ஐயும், அவருக்கு நேரிட்ட மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.25,000-ஐயும் சேர்த்து மொத்தம் ரூ.70,000-ஐ உடனடியாக அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருமணத் துணிகளைத் தேர்ந்தெடுப்பது போல, போட்டோகிராபர்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று
இச்சம்பவம் உணர்த்துகிறது.
