மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், சிறுவன் ஒருவனின் பள்ளிப் பைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
சந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் அஹிர்வார் என்ற நர்சரி வகுப்பு மாணவன், வழக்கம்போல வகுப்புக்குச் சென்று தனது பையைத் திறந்து புத்தகங்களை எடுக்க முயன்றபோது, அதற்குள் இருந்த சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள பாம்பு ஒன்று சீறியபடி வெளியே வந்தது.
தன் கண்முன்னே பாம்பைக் கண்ட அந்தச் சிறுவன், அதிர்ச்சியில் உறைந்து பையை அங்கேயே போட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினான். அவனைத் தொடர்ந்து வகுப்பறையில் இருந்த மற்ற குழந்தைகளும் பயத்தில் கூச்சலிட்டபடி வெளியேறினர்.
இதைக் கவனித்த ஆசிரியர் அபய் யாதவ், உடனடியாக வகுப்பறைக்குள் துணிச்சலுடன் நுழைந்து, அந்தப் பையை மிகவும் கவனமாகக் கையாண்டு பள்ளி வளாகத்திற்கு வெளியே கொண்டு சென்றார்.
பையைத் தரையில் வைத்தவுடன், அதிலிருந்து வெளிப்பட்ட பாம்பை மிகவும் லாவகமாகப் பிடித்த ஆசிரியர், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் அதைச் சிறைபிடித்தார். பின்னர், அந்தப் பாம்பைப் பாதுகாப்பாக அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று விடுவித்தார்.
ஆசிரியரின் இந்த சமயோசிதமான மற்றும் வீரமான செயலால், ஒரு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகப் பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். சிறுவனின் பைக்குள் பாம்பு எப்படி நுழைந்தது என்பது தெரியாத நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பெரும் பாதுகாப்பு அச்சத்தை உருவாக்கியுள்ளது.
