கரூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் மாணவி பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், தற்கொலை மிரட்டல் விடுத்து மாணவியை நேரில் வரவழைத்துள்ளார்.

பின்னர், அவரைப் பேருந்து நிலையத்தில் விடுவதாகக் கூறி பைக்கில் அழைத்துச் சென்று, வழியில் மறைத்து வைத்திருந்த தாலியை மாணவியின் கழுத்தில் வலுக்கட்டாயமாக கட்டியுள்ளார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத மாணவி கோவைக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.

இதன்பிறகு விடுமுறையில் மாணவி ஊருக்கு வந்தபோது, பாலமுருகன் அவர் வீட்டிற்கே சென்று தகராறு செய்துள்ளார். தாலி கட்டிய வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும், குடும்பத்தோடு எரித்துக் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவிக்குக் கட்டாயத் தாலி கட்டி மிரட்டல் விடுத்த பாலமுருகனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.