குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை, கேசவன்சேரி விளையைச் சேர்ந்த 31 வயது வாலிபருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இந்த வாலிபர், திருமணத்திற்குப் பிறகு மனைவியுடன் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்குச் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், திருமணம் முடிந்து 18-வது நாளான கடந்த 21-ஆம் தேதி மாலையில் புதுப்பெண் திடீரென மாயமானார். வெளியே சென்று வீடு திரும்பிய வாலிபரின் தாயார், மருமகளைக் காணாமல் அதிர்ச்சி அடைந்து மகனிடம் தகவல் தெரிவித்தார். பல இடங்களில் தேடியும் புதுப்பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை; அவரது கைப்பேசியும் அணைக்கப்பட்டிருந்தது. வீட்டில் தேடியபோது அவர் அணிந்திருந்த தாலிச் சங்கிலி மட்டும் கழற்றி வைக்கப்பட்டிருந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், வாலிபரின் கைப்பேசிக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு வாய்ஸ் மெசேஜ் புதுப்பெண் அனுப்பியுள்ளார். அதில், “விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி எனக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். உங்களை ஏமாற்றியதற்கு மன்னித்துவிடுங்கள். என்னைத் தேட வேண்டாம், நான் வரமாட்டேன். தாலியைகூட வேண்டாம் என்று கழற்றி வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

என்னால் உங்களோடு சந்தோஷமாக வாழ முடியவில்லை” என்று கூறியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் செய்வதறியாது திகைத்து, இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கத் தயாராகி வருகிறார்.