குமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை கேசவன்சேரி விளையை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர், வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். இவர் தற்போது மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன் இந்த மாதம் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பின், இருவரும் உறவினர் வீடுகளுக்கு விருந்து செல்வது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வந்தனர். இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு 18-வது நாளான 21ஆம் தேதியன்று மாலை புதுப்பெண் திடீரென காணாமல் போனார்.

அந்த நேரத்தில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞரின் தாயார், மருமகளை எங்கும் காணாததால் பதற்றமடைந்தார். உடனே மகனுக்கு தகவல் தெரிவிக்க, இருவரும் சுற்றியுள்ள பகுதிகளில் தேடி வந்தும் இளம்பெண்ணை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. புதுப்பெண்ணின் மொபைலும் சுவிட்ஷ் ஆஃப் நிலையில் இருந்தது. இந்நிலையில், வீட்டில் தேடியபோது தாலி செயின் மட்டும் உள்ளே வைக்கப்பட்டிருந்தது. இதனால், தானாகவே தாலியை கழற்றி வெளியேறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதற்கிடையில், இளைஞரின் செல்போனுக்கு திடீரென அவரது மனைவியின் வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது. அதில்— “விருப்பம் இல்லாமல் என்னை கட்டயப்படுத்தி திருமணம் செய்துவிட்டார்கள். உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். என்னைத் தேடாதீர்கள்… நான் திரும்ப வர மாட்டேன். தாலியும் எனக்கு வேண்டாம் என்பதால் கழற்றி வைத்துவிட்டேன். உங்களுடன் நான் சந்தோஷமாக வாழ முடியவில்லை… ப்ளீஸ்….” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவலை கேட்ட கணவர் அதிர்ச்சி அடைந்து திகைத்த நிலையிலிருக்கிறார்.