காலை மற்றும் மாலை வேளைகளில் ஆரோக்கியத்திற்காக ‘ஹெர்பல் டீ’ (Herbal Tea) அல்லது ‘பிளவர் டீ’ (Flower Tea) குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், இனி இது போன்ற பானங்களுக்கு ‘டீ’ (Tea) என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேயிலைச் செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் பானங்களுக்கு மட்டுமே ‘டீ’ என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற மூலிகை பானங்களுக்கு இந்தப் பெயரைப் பயன்படுத்துவது நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் செயல் என்றும் FSSAI விளக்கியுள்ளது.

​இந்த விதிமுறையை மீறி தேயிலை அல்லாத பானங்களுக்கு ‘டீ’ என்று பெயரிடும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனி பேக்கிங் செய்யப்பட்ட மூலிகை பானங்களின் லேபிள்களில் ‘டீ’ என்ற வார்த்தை இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, டயட் என்ற பெயரில் நீங்கள் குடிக்கும் பானங்கள் உண்மையில் தேயிலையா அல்லது வெறும் மூலிகைச் சாறா என்பதைப் புரிந்துகொள்ள இந்த அறிவிப்பு மிக முக்கியமானது.