இன்றைய காலத்தில் சிறிய விஷயங்களுக்கே வாள் உருவி ஒருவரையொருவர் கொலை செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் என்ற கிராமம் கடந்த 30 ஆண்டுகளாக எந்த சண்டையோ, தகராறோ இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறது.
கர்முக்தேஷ்வர் புனித யாத்திரை நகரில் கங்கை நதிக்கரைக்கு அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இங்கு இதுவரை காவல் நிலையத்தில் ஒரே ஒரு FIR கூட பதிவு செய்யப்படவில்லை. கிராம மக்கள் முழுமையான ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். சிறிய தகராறு ஏற்பட்டாலும் அது காவல் நிலையத்திற்குச் செல்லாமல், கிராம எல்லைக்குள் சர்பஞ்ச்(ஊர் பஞ்சாயத்து ) தலைமையில் தீர்க்கப்படுகிறது.

இந்த கிராமம் ரத்தன்கர் ராஜபுத்திரர்கள் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களும் கல்வியறிவு பெற்றவர்கள். பெரும்பாலானவர்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டுள்ளனர். சுமார் 20 குடும்பங்களுக்கு ஆயிரம் பிகா நிலங்களோடு, 30 குடும்பங்களுக்கு கனரக டிராக்டர்கள் மற்றும் சொகுசு கார்கள் உள்ளன. பலர் உயர்ந்த பதவிகளில் பணிபுரிந்து மதிப்பு பெற்றுள்ளனர்.
கிராம மக்கள் எந்த விதமான போதைப் பொருட்களையும் உட்கொள்வதில்லை என்பதும் முக்கிய அம்சமாகும். போதை பழக்கமில்லாததுதான் இங்கு கடந்த 30 ஆண்டுகளாக சண்டையோ, தகராறோ இல்லாமல் அமைதியாக வாழ வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அளவிலான உதாரணமாக விளங்கும் ரத்தன்கர் கிராமத்தைப் பற்றி ஹாபூர் ஏஎஸ்பி வினீத் பட்நாகர் பெருமை தெரிவித்துள்ளார். “இது காவல்துறைக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் மட்டுமல்ல, கிராம மக்களின் நல்லிணக்கமும் கூட. ஒவ்வொரு கிராமமும் இதுபோன்ற பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். கல்வியறிவு மற்றும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கைதான் சண்டையில்லா சூழ்நிலைக்கு காரணம்” என்று அவர் பாராட்டினார்.
கிராமவாசி டாக்டர் பன்வர் சவுகான், “என் நினைவுக்கு இன்றுவரை எங்கள் கிராமத்தில் எந்த சண்டையும் நடந்ததில்லை” என பெருமையுடன் கூறியுள்ளார்.
