மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் தங்கம் வென்று காவல்துறையில் கவனம் பெற்ற நவி மும்பை போலீஸ் கான்ஸ்டபிள் ஸ்வப்னில் அசோக் லோஹர் (வயது 31) வியாழக்கிழமை அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உல்வே பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட அவர், சன்பாடா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவியுடன் தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட வாக்குவாதம் இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றி போலீசார் கூறியதாவது: லோஹர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் உல்வேவின் செக்டார் 24-இல் உள்ள ஏக்நாத் சதன் கட்டிடத்தில் வசித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், குடும்பத் தகராறையடுத்து அவரது மனைவி குழந்தையுடன் அவுரங்காபாத் சென்றுவிட்டார். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில், தம்பதியர்கள் மீண்டும் தொலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது லோஹர் தற்கொலை செய்யப்போகிறேன் என மிரட்டியதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
அவரது சந்தேகத்தையடுத்து அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்ட அவர், உடனடியாக உல்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் வந்து கதவை உடைத்ததில், லோஹர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
லோஹர், தனது காவல் பணியுடன் சேர்த்து மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் நவி மும்பை காவல்துறையை பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவர் ஒரு பாடகராகவும், கலாச்சார நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கியவர். கடந்த தீபாவளி விழாவில், நவி மும்பை காவல் ஆணையரகத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அவர் வழங்கிய பாடல் நிகழ்ச்சி பாராட்டைப் பெற்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உல்வே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
