வருகிற பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தெலுங்கு திரைப்படத் துறை முழுவதும் கடும் போட்டி நிலவுகிறது. அந்தப் பட்டியலில் தற்போது சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் கரு’ (எம்.எஸ்.வி.ஜி) திரைப்படமும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இப்படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வெங்கடேஷ் மற்றும் கேத்தரின் தெரசா நடித்துள்ளனர். இசையமைப்பை பீம்ஸ் சிசிரோலியோ மேற்கொண்டுள்ளார். அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் சாஹு கராபதி, சுஷ்மிதா கொனிடேலா தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிகழ்வில் இயக்குநர் அனில் ரவிபுடி ஊடகங்களிடம் பேசினார். நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தது குறித்து அவர் கூறுகையில், “நயன்தாரா எப்படி இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டார் என்று பலரும் கேட்டார்கள். அந்த நேரத்தில் என் அதிர்ஷ்டம் எனக்குச் சாதகமாக இருந்தது; அதனால் அவர் ஒப்புக்கொண்டார்” என தெரிவித்தார்.

மேலும், தெலுங்கு திரையுலகின் முக்கியமான நட்சத்திரங்களாக கருதப்படும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, வெங்கடேஷ் ஆகியோர் ஒரே திரையில் தோன்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும், அந்த ஆசையில் ஒரு பகுதியாக இந்தப் படத்தில் சிரஞ்சீவி – வெங்கடேஷ் கூட்டணியை ரசிகர்கள் காணவிருக்கிறார்கள் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.