அமெரிக்க உளவுத்துறையின் ‘2026-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு’ அறிக்கை, பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் அணு ஆயுதப் போட்டி குறித்துக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
குறிப்பாக, 5,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாயும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பாகிஸ்தான் உருவாக்கி வருவது, தெற்காசியாவிற்கு அப்பாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதச் சம்பவங்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம் என்ற அபாயம் இருப்பதாகவும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், தனது ஏவுகணைத் திட்டம் முற்றிலும் தற்காப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்று விளக்கம் அளித்துள்ளது.
‘நம்பகமான குறைந்தபட்ச தடுப்புக் கொள்கையை’ பின்பற்றுவதாகவும், பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதே தங்களின் இலக்கு என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான மோதலைத் தூண்டக்கூடும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கை, சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
