மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் நாட்டின் பெண் சக்திக்கு எதிராகப் பெரும் பாவத்தைச் செய்துவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகச் சாடியுள்ளார். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகுக்கும் இந்த முக்கியமான மசோதாவைத் தடுத்ததன் மூலம், இந்தியப் பெண்களின் நீண்டகாலக் கனவுகளையும் முன்னேற்றத்தையும் எதிர்க்கட்சிகள் சிதைத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
இது குறிப்பாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் சுயநல அரசியலுக்காக இந்த மசோதாவைத் தோற்கடித்ததை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இதற்காக அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் அரசியலமைப்புச் சாசனத்தை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த விவகாரத்திற்காகத் தான் நாட்டுப் பெண்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மசோதா முடக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் இந்த ஜனநாயக விரோதப் போக்கிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். பெண்களின் உரிமைகளுக்காகத் தனது அரசு தொடர்ந்து போராடும் என்ற உறுதியையும் அவர் இதன்போது வெளிப்படுத்தினார்.
