மகாராஷ்டிராவின் பரத்வாடா பகுதியில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளியான அய்யான் அகமது மற்றும் அவனது கூட்டாளி உஜைர் கான் இடையே ஏற்பட்ட பணத் தகராறுதான் இந்த மொத்த விவகாரத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

அய்யானிடம் பணம் கேட்ட உஜைர் கான், அவர் தராததால் அய்யானின் மொபைலில் இருந்த பாலியல் வீடியோக்களைத் திருடி மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோக்கள் வைரலானதை அடுத்து, 42 பேர் கொண்ட எஸ்ஐடி போலீசார் களத்தில் இறங்கி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை எந்தப் பெண்ணும் புகார் அளிக்க முன்வராத நிலையில், அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மைனர் சிறுமி தற்போது போலீசில் துணிச்சலாகப் புகார் அளித்துள்ளார். அந்த சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அமராவதியில் உள்ள ஒரு பிளாட்டில் வைத்து அய்யான் அகமது அத்துமீறியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த பிளாட் உரிமையாளர் மற்றும் அய்யானின் பெற்றோரிடமும் போலீசார் கட்டம் கட்டி விசாரணை நடத்தி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் எடுத்துத் தருவது மற்றும் மொபைல் போன் விற்பனை மூலம் பெண்களிடம் பழகிய அய்யான், சுமார் 90 சதவீத பெண்களை சமூக வலைதளங்கள் வாயிலாகவே தனது வலைக்குள் வீழ்த்தியது தெரியவந்துள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால், அய்யான் அகமது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையிலும், இன்ஸ்டாகிராமில் அவனது ஃபாலோயர்கள் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருவது போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோக்களை மற்றவர்களுக்கு ஃபார்வர்ட் செய்த 6 பேரைக் கண்டறிந்துள்ள போலீசார், அவர்கள் பின்னணியில் ஏதேனும் பெரிய கும்பல் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். “பாதிக்கப்பட்ட பெண்கள் பயமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்” என மாவட்ட எஸ்.பி விஷால் ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.