தமிழகத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நடத்தப்படும் கடைசிப் பிரசாரம் இது எனத் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக-விற்கும் திமுக-விற்குமே நேரடிப் போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் பேசியதாவது,
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் நான் நூறு சதவீதம் உறுதியாக இருப்பேன். எம்மதமும் நம்மதம் என்பதே விஜய்யின் முகம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் நண்பனாகவும், சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாகவும் என்றும் இருப்பேன்.
சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸை கைக்குள் போட்டுக்கொண்டு, பாஜகவுடன் திமுக மறைமுகக் கூட்டணி வைத்துள்ளது. சிங்கம் தனியாக வந்தாலும் அனைவருக்கும் ‘தண்ணி காட்டிவிடும்’. மக்கள் அனைவரும் சட்டப்பேரவைத் தேர்தல் அன்று விரைவாகச் சென்று ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தவெக சின்னம் தொடர்பாக விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய விஜய், “10 தேர்தல்களில் தோல்வியடைந்தவர் எல்லாம், நான் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என விமர்சிக்கிறார். அவரால் எடப்பாடி தொகுதியைத் தாண்டி வெளியே வர முடியுமா? தோல்வி பயத்தால் சொந்தத் தொகுதியிலேயே நமது தவெக சின்னத்தைத் திருடியவர் அவர். அவருக்குப் பாடம் புகட்ட ‘டிவி’ சின்னத்திற்கு (டிவிகே ஆதரவுடன்) வாக்களியுங்கள்” எனத் தெரிவித்தார்.
“நான் நடிகன்தான், ஆனால் அரசியலில் நடிக்க வரவில்லை. இங்கு நான்கு முனைப் போட்டியோ, நாற்பது முனைப் போட்டியோ கிடையாது. களம் இரண்டே பேருக்குத்தான். ஒன்று திமுக, இன்னொன்று தவெக. உங்கள் விஜய்க்காக ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், வெற்றி நிச்சயம்” என அவர் உணர்ச்சி பொங்கப் பேசினார்.
