கரூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ ஏதேனும் நேர்ந்தால் அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜிதான் பொறுப்பு என்றும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், திமுக சார்பில் ஆசி.தியாகராஜனும் போட்டியிடுகின்றனர். நேற்று தான்தோன்றிமலை பகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘கோயில் இனாம் நில விவகாரம்’ தொடர்பாக துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தார். அப்போது அங்கு வந்த திமுகவினர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அவர் புகார் அளித்தார். இதன் விளைவாக, தற்போது ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று கரூர் அதிமுக அலுவலகத்தில் 50 அம்ச தேர்தல் அறிக்கையை வெளியிட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கடந்த 2021 தேர்தலைப் போலவே தற்போதும் சிலர் என்னைப் பின் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவர்கள் திமுகவின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள். என்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக அஞ்சுகிறேன். எனக்கோ, என் குடும்பத்திற்கோ அல்லது என்னைச் சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு செந்தில் பாலாஜியும், அவர் தம்பி அசோக்குமாரும்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

மேலும் அவர் பேசுகையில், “என்னை நேருக்கு நேர் களத்தில் சந்திக்கச் சவால் விட்ட செந்தில் பாலாஜி, தற்போது தோல்வி பயம் காரணமாக கோவைக்குச் சென்றுவிட்டார். ஆனால் நான் இன்னும் கரூர் களத்தில்தான் இருக்கிறேன். கரூரில் எப்படியாவது வன்முறையைத் தூண்டி தேர்தலை நிறுத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கும் வேளையில், முன்னாள் அமைச்சர் ஒருவர் தனக்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கோரியிருப்பதும், ஆளுங்கட்சி பிரமுகர்கள் மீது புகார் அளித்திருப்பதும் கரூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.