தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையான “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026”-ஐ சமீபத்தில் வெளியிட்டுள்ளது. “சங்க கால வேர்களில் இருந்து செழிப்பான எதிர்காலத்தை நோக்கி” என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை இலக்காகக் கொண்டு பல்வேறு அதிரடித் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பற்றி தற்போது பாப்போம். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,000 ஊக்கத்தொகை மற்றும் ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ‘ஜீரோ எஃப்ஐஆர்’ முறை சீரமைக்கப்படும். சிறு, குறு கடன்களாக ₹50 லட்சம் வரை வட்டி இல்லா கடன் மற்றும் எலக்ட்ரிக் வாகனம் வாங்க ₹25,000 மானியம் வழங்கப்படும்.
ஒரு லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களின் கல்விக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு AI மற்றும் ரோபாட்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படுவதோடு, தமிழக மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். முதல் தலைமுறை மாணவர்களுக்கு ₹10 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு PM-KISAN திட்டத்தின் கீழ் கூடுதலாக ₹3,000 மாநில அரசு சார்பில் வழங்கப்படும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 100 கி.மீ தூரத்திற்குள் பருத்தி அரைக்கும் ஆலைகள் அமைக்கப்படும். மீனவர்களுக்கான மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ₹12,000-ஆகவும், லீன் பீரியட் உதவித்தொகை ₹8,000-ஆகவும் உயர்த்தப்படும். 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதம் ₹2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
மத்திய அரசுடன் இணைந்து 10 ‘பிளக் அண்ட் பிளே’ தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். போக்குவரத்துத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வர: சென்னை – பெங்களூரு – ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடம். சென்னை முதல் டெல்லி, மும்பை, கொல்கத்தாவிற்கு ‘ஸ்லீப்பர் வந்தே பாரத்’ ரயில்கள். முன்னோடித் திட்டமாக ஹைட்ரோ பவர் ரயில் அறிமுகம்.
தமிழகத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், தைப்பூசம் மாநிலத் திருவிழாவாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். திருக்கோயில்களின் நித்ய பூஜைகளுக்காக அரிசி, நெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு மாதந்தோறும் வழங்கப்படும். மேலும், கோயில்களின் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ₹25,000 மானியம் வழங்கப்படும்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க, ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ மற்றும் ‘தனி நுண்ணறிவுப் பிரிவு’ உருவாக்கப்படும். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பிரதமர் மோடியின் உத்தரவாதங்கள். ஊழலற்ற, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க ‘இரட்டை எஞ்சின்’ அரசாங்கம் அவசியம்” என பாஜக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
