விருதுநகர் மாவட்டம், கூமாபட்டி நெடுங்குளத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). தேங்காய் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்த இவர், குடும்பத்தில் மனைவி அன்னலட்சுமி (32), மகள் குரு ஸ்ரீ (13), மகன் பிரசாத் (6) என இரு பிள்ளைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம், தனது வழக்கமான வேலையாக அப்பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்தச் சமயத்தில், நீண்ட கம்பு கொண்டு ஒரு தென்னைமரத்தின் கீழ் நின்றபோது, அவர் பறித்த தேங்காய் குலை எதிர்பாராத விதமாக தலையில் விழுந்தது.

அந்தக் குலையில் இருந்த ஒரு கூர்மையான தென்னம்பாளை, அவரது கழுத்தில் நேரடியாக குத்தி, சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த துயரமான சம்பவம் கூமாபட்டி ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசனின் இறப்பால் அவரது குடும்பத்தினர் தவிக்கும் நிலையில் உள்ளனர். இந்த சம்பவம்  தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.