தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா, செட்டிக்குறிச்சி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மகேந்திரனின் மனைவி ஈஸ்வரி, தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரில் வந்து மனு அளித்தார்.

மனுவில் அவர் கூறியதாவது: “என் கணவர் மகேந்திரன், கடந்த ஜூலை 16-ம் தேதி சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் குவைத் நாட்டிற்குப் புறப்பட்டார். ஜூலை 17-ம் தேதி அதிகாலை குவைத் விமான நிலையம் சென்றடைந்ததும், எனக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்து, நண்பர்களுக்கும் தகவல் கூறிவிட்டதாக தெரிவித்தார். பின்னர், கைரேகை சரியாக பதிவாகவில்லை என கூறி போலீசார் விசாரணை மேற்கொண்டதாகவும், தனது செல்போனில் சார்ஜ் இல்லாததால் விரைவில் அணைந்துவிடும் எனவும் கூறினார்.”

அதன் பிறகு, அந்த கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு அவர் தகவல் அனுப்பியதாகவும், ஜூலை 17-ம் தேதி ஐ.எம்.ஓ செயலி மூலம் தொடர்பு கொண்டபோது, “பின்னால் பேசுகிறேன்” என மகனிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எந்தத் தகவலும் கிடைக்கவில்லையாம். மேலும், வேலைக்கு செல்வதாகக் கூறிய நிறுவனம், “அவர் எங்கள் நிறுவனத்தில் வேலைக்குத் திரும்பவேயில்லை” என தகவல் அளித்துள்ளது.

இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விசாரித்தபோது, மஹேந்திரன் விமான நிலையத்திலிருந்து வெளியே சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, மாயமான கணவர் பற்றிய தகவலை விரைவில் அறிந்து, தேடி கண்டறிய மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் ஈஸ்வரி கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது