வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அருகே உள்ள குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மகன் பாரத் (36) சென்னை சிறப்பு ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த நந்தினியுடன் திருமணம் ஆன பாரதிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த பாரத், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவியுடன் கடைக்குச் சென்றபோது, குருவராஜபாளையம் அருகே மர்மநபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரது 3 வயது மகள், “சஞ்சய் மாமா அப்பாவை வெட்டினார்” என கூறியதும், போலீசார் மனைவி நந்தினியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நந்தினிக்கு எதிர்வீட்டில் வசிக்கும் சஞ்சய் (21) என்பவருடன் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது. கணவர் பாரத் இது குறித்து கண்டித்ததால், மனைவி மற்றும் கள்ளக்காதலன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தனர். கொலை நாளன்று மனைவி நந்தினி பாரதிடம் கடைக்குச் செல்ல வேண்டுமென கூறி அழைத்துச் சென்றதாகவும், வழியிலேயே சஞ்சய் தேங்காய் கத்தியால் பாரதின் கை, தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளதாக தெரியவந்தது.
கொலைக்கு பிறகு தலைமறைவான சஞ்சயின் கைபேசியை கண்காணித்த போலீசார் 3 மணி நேரத்தில் அவரை கைது செய்தனர். விசாரணையில் சஞ்சய் மற்றும் நந்தினி இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் பரபரப்பும் துயரும் நிலவுகிறது. மேலும், இதில் வேறு யாராவது தொடர்புடையவர்களா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
