திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் மாரி சிவா என்ற 20 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்ட நிலையில் பின்னர் அது காதலாக மாறியது.
இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையில் கடந்த 20 ஆம் தேதி திடீரென சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். இதேபோன்று வாலிபரம் வீட்டில் இருந்து காணாமல் போனார்.
இது தொடர்பாக இருவரது குடும்பத்தினரும் கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் வாலிபர் மற்றும் சிறுமி இருவரும் ஒரே கயிறில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இதை அந்த வழியாக பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெற்றோர் வேதனையில் மூழ்கியுள்ளனர்.
