அமிர்தசரஸில் உள்ள ஒரு தபால் நிலையத்தில், பணியாளர் ஒருவருக்கும் உள்ளூர்வாசி ஒருவருக்கும் இடையே மொழி தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தபால் நிலையப் பணியாளர் பஞ்சாபி மொழியில் பேசுமாறு வற்புறுத்தப்பட்டபோது, “எனக்கு பஞ்சாபி தெரியாது” என்று அவர் பதிலளித்தது இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மேலும் உள்ளூர் மொழியான பஞ்சாபியில் பேசத் தெரியாத ஒருவரை இங்கு ஏன் பணியமர்த்த வேண்டும் என்று அந்த நபர் கேள்வி எழுப்பியதுடன், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்குள்ள வேலைவாய்ப்புகளைப் பறித்துக் கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“>

அரசுப் பணிகளில் உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தை ஒரு தரப்பினர் வலியுறுத்தும்போது, ஒருவரின் திறமையை மொழியின் அடிப்படையில் மதிப்பிடக்கூடாது என்றும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பணியாற்றும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்றும் மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. வட மாநிலங்களில் உள்ளூர் மொழிக்கும் பிற மொழி பேசுபவர்களுக்கும் இடையே அவ்வப்போது நிகழும் இத்தகைய மொழிச் சிக்கல் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.