திருமணமான ஒரே ஆண்டில், குடும்பத் தகராறு காரணமாக புனேவில் ஒரு பெண் தனது கணவர் முகத்தில் கொதிக்கும் டீயை ஊற்றிப் பொசுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் வசிக்கும் இத்தம்பதியினரிடையே கடந்த சில மாதங்களாகவே சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த மனைவி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த டீயை அப்படியே எடுத்து கணவரின் முகத்தில் ஊற்றியுள்ளார். இந்த கொடூரமான தாக்குதலில் கணவரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்தப் பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வருடத்திற்கு முன்புதான் இவர்களுக்குத் திருமணம் முடிந்த நிலையில், இத்தகைய வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
