தமிழ்நாட்டின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் கடன் சுமை 5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமார் 10 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது என்றும், இது ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ஏற்றப்பட்ட பெரும் சுமை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மாநிலத்தின் நிதிநிலை இவ்வளவு மோசமாக இருப்பதை மக்கள் உணர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய கடனுக்கு வட்டியாகவே 56,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இப்படிப்பட்ட நிதி நெருக்கடியில் இருக்கும்போது, தொலைநோக்கு பார்வை கொண்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பணத்தைச் செலவிடாமல், வெறும் கவர்ச்சித் திட்டங்களுக்காக ஒரே நாளில் 6,500 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று வாரியிறைப்பது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம்” என்று விமர்சித்துள்ளார். ஓட்டுக்காக மக்களை ஏமாற்ற கடன் வாங்கித் திட்டங்களை அறிவிப்பது மாநிலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
