சேலம் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆக்ரோஷமாகப் பேசிய நடிகர் விஜய், “அடுத்தவர்களின் முகவரியில் அரசியல் செய்பவர்களுக்கு ஒரு சவால். என்னை மாதிரி தனியாகக் கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்க தில், திராணி இருக்கிறதா?” என திமுக மற்றும் அதிமுக-வை நேரடியாகச் சாடினார். விஜய்யின் இந்தத் துணிச்சலான பேச்சுக்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிகவும் காரசாரமான மற்றும் தனிப்பட்ட விமர்சனங்கள் அடங்கிய பதிலடியைக் கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாவம், விஜய் அனுபவமே இல்லாதவர். அவர் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும். அப்படி வந்தால்தான் அரசியல் செய்ய முடியும்” என்று அதிர வைத்தார். மேலும், “தன் குடும்பத்துடன் நல்ல உறவு வைத்துக்கொள்ளாதவர் எப்படித் தலைவனாக முடியும்? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தை ஏறி வைகுண்டம் போக முடியுமா? ஒரு கவுன்சிலர் கூட இல்லாத கட்சிக்கு 30 சதவீத வாக்கு வந்துவிட்டதாகச் சொல்வது வேடிக்கை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்” என விஜய்யின் அரசியல் கனவைப் பகிரங்கமாகக் கேலி செய்துள்ளார்.
