சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய், அதிமுக மற்றும் திமுக-வை கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, “அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மறந்தவர்கள் நம்மைப் பார்த்து அனுபவம் இல்லை என்கிறார்கள்” என்று அதிமுக-வை மறைமுகமாகத் தாக்கினார். விஜய்யின் இந்த விமர்சனம் அதிமுக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் விஜய்யை ‘பனையூர் பண்ணையார் அங்கிள்’ என்று குறிப்பிட்டு மிகக் கடுமையான பதிலடியைத் தந்துள்ளது.

​அந்தப் பதிவில், “அப்பா தயவால் சினிமாவில் நுழைந்து, ரஜினி மற்றும் விஜயகாந்தைப் பார்த்து காப்பி அடித்து வளர்ந்தவர் நீங்கள். சொந்தமாக ஒரு வரி கூடப் பேசத் தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை ஒப்பிப்பவர் எப்படி ஒரிஜினல் ஆவார்? மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு வாட்ஸ்அப் குழு நடத்தும் நீங்கள் அதிமுக-வைப் பற்றிப் பேசலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சினிமாவில் 2000 ரூபாய்க்கு டிக்கெட் விற்பது கொள்ளை இல்லையா? அப்படிப் பார்த்தால் உங்களுக்கு 30 ஆண்டு கால கொள்ளை அனுபவம் இருக்கிறது என்றும், ஓரமா போய் விளையாடுங்கள் என்றும் அதிமுக மிகக் காட்டமாக விமர்சித்துள்ளது.