திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் திடீரென பெண்களின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாயைச் செலுத்தியிருப்பதை, மக்களின் வாக்குகளைப் பறிக்க நடக்கும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சி என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத ஆர்வம், இப்போது மட்டும் ‘முன்பணம்’ என்றும் ‘கோடைக்காலச் சிறப்புத் தொகை’ என்றும் பொங்குவது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் பெண்களைக் கவர அரசு செய்யும் இந்த நாடகம் எடுபடாது என அவர் எச்சரித்துள்ளார்.

​மேலும் அவர் பேசுகையில், “2021 தேர்தல் வாக்குறுதிப்படி மாதம் 1,000 ரூபாய் கொடுத்திருந்தால், இந்நேரம் ஒவ்வொரு பெண்ணுக்கும் 30,000 ரூபாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், முதல் 30 மாதங்கள் தராமல் ஏமாற்றிவிட்டு, இப்போது வெறும் 5,000 ரூபாயைக் கொடுத்துவிட்டு மீதமுள்ள 25,000 ரூபாயை அப்படியே அமுக்கப் பார்ப்பது மக்களை முட்டாளாக்கும் செயல்” என ஆவேசமாகத் தெரிவித்தார். தர வேண்டிய நிலுவைத் தொகையை மொத்தமாகக் கொடுக்காமல், துண்டுத் தொகையைக் கொடுத்துத் திசை திருப்புவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.