காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பெரியார் தெருவில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தேவி. கணவரை இழந்த இவர், தனியார் தொழிற்சாலையில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.
இவருடைய மகன் அனில்குமார் (12), அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மரத்தில் சேலையைக் கட்டி ஊஞ்சல் கட்டி விளையாடியதாகக் கூறப்படுகிறது.
ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு சுற்றி விளையாடியபோது, எதிர்பாராத விதமாகச் சேலையில் கழுத்து இறுக்கி அனில்குமார் கூச்சலிட்டபடி மயங்கி விழுந்துள்ளார். மாணவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டுச் சிகிச்சைக்காகச் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனில்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அனில்குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
