கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் ஹரிபிரசாத் (15 வயது), கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்து வந்தார். அனைத்துத் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெற்று வந்த இந்த மாணவனுக்கு இன்று (புதன்கிழமை) அரையாண்டுத் தேர்வு நடைபெற இருந்ததால், நேற்று விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது, மாணவனிடம் அவரது பெற்றோர், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பெற்றோரின் வற்புறுத்தலால் மனமுடைந்த ஹரிபிரசாத், வீட்டின் சமையல் அறையில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைப் பார்த்துப் பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவனை உடனடியாக மீட்டுச் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஹரிபிரசாத் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.