தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், விஜய்யின் வியூக வகுப்பாளர் நடத்திய ஆய்வில், திருச்சி கிழக்கு தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரியவந்துள்ளதாம்.
தவெக வட்டாரங்களிடம் விசாரித்ததில், விஜய் போட்டியிடுவதற்கு திருச்சி கிழக்கு, திருவாடானை, மற்றும் மதுரை மேற்கு ஆகிய மூன்று சாதகமான தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகமாக இருப்பதால், அது விஜய்க்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விஜய் தனது முதல் பிரச்சாரத்தைத் திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட் மரக்கடையில் துவக்கினார், இதுவும் கிழக்குத் தொகுதியில்தான் வருகிறது. திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்து வருவதாகவும், எனினும், இறுதி முடிவை விஜய் தான் எடுப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
