தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி விவகாரங்கள் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து நடிகர் விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி. செல்வகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “விஜய்க்காக ஆரம்பக் காலத்திலிருந்து உழைத்தவர்கள், போஸ்டர் ஒட்டியவர்கள் மற்றும் கட்-அவுட் வைத்த ரசிகர்களுக்குக் கட்சியில் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். மாறாக, திடீரென உள்ளே வந்த பணக்காரர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் போன்றோரின் பின்னணி மற்றும் தகுதிகள் குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பேசிய அவர், கட்சியின் கட்டமைப்பை உருவாக்கிய எஸ்.ஏ. சந்திரசேகரை ஓரம் கட்டிவிட்டு, புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்திற்குத் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய தவறு என்று சுட்டிக்காட்டினார். கரூர் விபத்திற்குப் போதிய திட்டமிடல் இல்லாததே காரணம் என்று கூறிய அவர், “விஜய் சரியான நபர்களைத் தனது ஆலோசகர்களாக வைத்துக்கொள்ளாவிட்டால், வரும் தேர்தலில் மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள்” என்று எச்சரித்தார். தான் இனி ஒருபோதும் விஜய்யுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த செல்வகுமார், திமுக இளைஞரணி மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஒப்பிட்டு, தவெக நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையும் கடுமையாகச் சாடினார்.

மேலும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் ரெக்கமண்டேஷனில் விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்தவர் என்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த அவருக்கு தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய அதிகாரம் கொடுத்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியவர் செங்கோட்டையன் மக்களுக்காக அப்படி என்ன பெரிய தியாகத்தை செய்துவிட்டார் என்றும் கேள்வி அனுப்பினார். மேலும் ரசிகர் மன்றத்தை சேர்ந்த யாருக்காவது விஜய் பதவி கொடுத்துள்ளாரா என்று கேட்ட அவர் புதிய பணக்காரர்களுக்கும் கட்சியில் புதிதாக வந்தவர்களுக்கு மட்டுமே பதவி கொடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் விஜய் நல்லவர்களை தன்னுடன் வைத்துக் கொள்ளாவிட்டால் கண்டிப்பாக வரும் தேர்தலில் அவருக்கு மக்கள் பாடம் போடுவார்கள் என்றும் கூறினார்.